முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
 
குட்டி
 
 
கல்லூரி மாணவி ஸ்ரேயா மேல் எம்.பி. மகன் தியானுக்கு காதல். கல்லூரி மொட்டை மாடியில் ஏறி தற்கொலை செய்வேன் என மிரட்டி காதலை ஏற்க வைக்கிறார். அதே கல்லூரியில் படிக்க வரும் தனுசுக்கும், ஸ்ரேயா மேல் ஆசை. ஒருதலையாக காதலிக்கிறார். தியான் காதலை தந்தை ராதாரவி ஏற்க மறுக்கிறார். அமைச்சர் பெண்ணை நிச்சயம் செய்கிறார். ஸ்ரேயா நொறுங்குகிறார்.

அவர் வேதனையை தாங்கமாட்டாத தனுஷ், ராதாரவி வீட்டுக்குள் புகுந்து தியானை கடத்தி போகிறார். ரவுடிகள் விரட்டுகின்றனர். தியான், ஸ்ரேயாவை அழைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றுகிறார். அப்போதும் ஸ்ரேயா என்னை விரும்பாவிட்டாலும் நான் காதலிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே போகிறார். ஸ்ரேயா யாரை கைபிடிக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

கல்லூரி மாணவனாக துறுதுறுவென வருகிறார் தனுஷ். காதலன் எதிரிலேயே ஸ்ரேயாவிடம் "ஐ லவ்யூ" என்று கூறி, பூச்செண்டு கொடுப்பதில் இருந்து உன் காதல் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா என அடிக்கவரும் தியானை அமைதியாக்கியது வரை "அப்ளாஸ்".

ஸ்ரேயா தோழிகள் தியான், தனுசை பார்த்து உன் லவ்வர்ஸ் வந்திருக்காங்க என கலாய்ப்பது, ரெயில் டிக்கெட் பரிசோதகரிடம் ஸ்ரேயா என் காதலி, தியான் ஸ்ரேயாவோட காதலன் என சொல்லி குழப்புவது ரகளை. ஸ்ரேயா மனதில் இடம் பிடிக்க தனுஷ் செய்யும் தந்திரங்கள் வலுவானவை.

தியானை விரட்டி விட்டு ஸ்ரேயாவை அனுபவிக்க துடிக்கும் வின்சென்ட் அசோகனிடம் தனுஷ் மோதுவது சூடான குஸ்தி. அப்போதே கிளைமாக்சை யூகிக்க முடிகிறது. தனுஷ் மேல் ஸ்ரேயாவுக்கு அன்பு துளிரும்போது தியான் தந்தை மனம் மாறி மருமகளாக ஏற்றுக்கொள்வது திருப்பம்.

ஸ்ரேயா அழகில் பூத்து விரிகிறார். தன்னை காதலிக்கும் இரு வாலிபர்கள் மத்தியில் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தைகளை கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். திருமண மண்டபத்தில் ஸ்ரேயா கடலில் தொலைத்த கொலுசை தனுஷ் பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பதை குழந்தைகள் மூலம் கிளை மாக்சில் வெளிப்படுத்துவது ஜீவன்.

தியான் கடுகடு காதலனாக வருகிறார். வின்சென்ட் அசோகன் வருகைக்கு பின் "ஜெட்வேகம்". காதல் ஜோடிகளை கொலை வெறியோடு துரத்துவதும் தனுஷ் பதிலடி கொடுத்து பாதுகாப்பதும் விறுவிறுப்பு. தியானை விரட்டி விட்டு ஸ்ரேயாவை மானபங்கம் செய்வதில் கொடூரம் காட்டுகிறார்.

வித்தியாசமான கதைகளத்தில் கலகலப்பும், விறுவிறுப்புமாய் கதையை நகர்த்துகிறார் இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர். தற்கொலை மிரட்டலுக்கு பயந்து எம்.பி. மகன் காதலுக்கு ஸ்ரேயா சம்மதம் சொல்வதில் அழுத்தம் இல்லை. காட்டில் தனுஷ், ஸ்ரேயா தனிமை சந்திப்புகளை இன்னும் உயிரோட்டமாக்கி இருக்கலாம்.

ஸ்ரீநாத், ஆர்த்தி காமெடி கலகலப்பு. மேக்னாநாயுடு ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு போகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் தாள ரகம்.

 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution