முகப்பு இலக்கியம் சினிமா பக்கம் உடல் நலம் பெண்கள் உலகம் சமையல் குறிப்பு சிறுவர் உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா ராசிபலன் WTR டிஜிட்டல்
 
தமிழ்படம்
 
 
சினிமாபட்டி கிராமத்து இளைஞர்கள் பட்டினத்துக்கு போய் நடிகராகி, அடுத்த முதல்வர் நான்தான் என அறிக்கை விடுவதால் அந்த கிராமத்தை ஆட்சியாளர்கள் ஒதுக்குகின்றனர்.இதனால் பஞ்சாயத்தை கூட்டி ஆண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி கொல்லும்படி நாட்டாமை தீர்ப்பு சொல்கிறார். பெரியார்தாசனுக்கு ஆண் குழந்தை பிறக்க அதையும் கொல்லச் சொல்கிறார். பாட்டி பறவை முனியம்மா குழந்தையை பட்டினத்துக்கு கடத்தி வந்து வளர்க்கிறார்.

குழந்தை வளர்ந்து சிவாவாகிறார். அநீதிகளை தட்டிக்கேட்டு மக்கள் மத்தியில் ஹீரோவாகிறார். அவருக்கு கட்- அவுட் வைத்து அடுத்த முதல்வர் என்று கொண்டாடுகிறார்கள். வில்லன்களை தேடிப்பிடித்து தீர்த்து கட்டுகிறார்.ஒரு கட்டத்தில் சிவா போலீஸ் அதிகாரி என்பதும், அவர் நடத்திய கொலைகள் திட்டமிட்ட என்கவுண்டர் என்றும் முடிச்சு அவிழ்கிறது. ரவுடிகள் கும்பலின் தலைவனை சிவா அழிக்கப்போவதும், தலைவன் யார் என்பதும் எதிர்பாராத கிளைமாக்ஸ்.

காமெடியை கரைத்து குடிக்க வைத்து வயிறுவலிக்க சிரிக்க வைக்கிறார் இயக்குனர் அமுதன். தமிழ்ப்பட பார்முலாக்களையும் ஹீரோக்களையும் பிரித்து மேய்கிறார்.ஆண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொல்ல வேண்டும், இல்லாவிட்டால் விரல் நடிகர் படத்தை நூறு தடவை பார்க்க வேண்டும் என்ற நாட்டாமை பொன்னம்பலத்தின் ஆரம்ப அதிரடியே குபீர்.

மாமூல் ரவுடிகளை பார்த்து சிறுவன் சிவா ஆவேசமாவதும், பாட்டி நான் எப்ப பெரியவன் ஆகி இவர்களை தட்டிக் கேட்பது என்று அவன் கேள்வி விடுப்பதும், சைக்கிளில் ஏறி பெடல்போடு என பாட்டி சொல்ல பெடலை சுற்றி முடிப்பதற்குள் சிவாவாக வளர்வதும் ரகளை. உலக சூப்பர் ஸ்டார், புதிய தளபதி, வைஸ்கேப்டன் 2011-ல் முதல்வர் என்றெல்லாம் பட்டங்கள் "கியூ" கட்ட சிரிப்பலையில் சுனாமிவீச்சு.

காப்பி குடிப்பதற்குள் சிவா கோடீஸ்வரனாவது... ரவுடிகளிடம் தப்ப கரும்புள்ளி வைத்து மாறுவேடம் போடுவது வெட்டை வெளியில் வயிறுமுட்ட திண்பவரை பார்த்து சோலையம்மா செத்ததில் இருந்து இவரு இப்படித்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்று ராஜ்கிரணை கிண்டலடிப்பது ஆரவாரம்.

நடனம் கற்க பாக்யராஜ் சி.டி.க்களை போடுவது, பாட்டு பாடி பால்கறக்கும் ராமராஜனுக்கு ஊர் எல்லையில் சிலை வைத்திருப்பது என காமெடிகளோபரம் நீள்கிறது.சிவா அத்தனை ஹீரோக்களையும் துணிச்சலாக வாரியுள்ளார். சிவாவின் கல்லூரி நண்பர்களாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிறஆடை மூர்த்தி, மனோபாலா கோஷ்டியின் லொள்ளு ரகளை. திஷா காதலியாக வருகிறார்.

அபூர்வசகோதரர்கள், அன்னியன் பாணியில் வில்லன்களை கொல்ல முயன்று சிவா தோற்பதும், இவர் தொல்லை தாங்காமல் அவர்களே தற்கொலை செய்வதும் வயிற்றை புண்ணாக்குகிறது.நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு கிராமம், நகரமெங்கும் சுழல்கிறது. தமிழ் படங்களில் பொறுக்கி எடுத்த ஓமசீயா ரெண்டக்க பாடல் விசில். முழுக்க காமெடி தளத்திலேயே காட்சிகள் நகர்வதையும், சில காட்சிகள் கோர்வையில்லாமல் தடுமாறுவதையும் தவிர்த்திருக்கலாம்.

 
Hosting/Design Service | Tamil News & Entertainment Portal | 24hrs live Online Radio | Web TV | Starasia TV | About us | Contactus | Hosting Registration | Feedback | Advertise

Copyrights(c) 2010, All rights reserved. Yellowin Media.(Trademark Notice)
All Trademarks, Service Marks and logos are owned by or Registered to Yellowin Media.
Best viewed in 1024 x 768 Resolution