| |
| சொனாட்டா கார்களை திரும்ப பெறுகிறது ஹுண்டாய் | | |  | | | | சியோல்: ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய, 'சொனாட்டா' வகை மாடல் கார்களில், கதவு தாழ்ப்பாளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, 47 ஆயிரம் கார்களை திரும்பப் பெற உள்ளதாக, அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய், தானே முன் வந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் அமைந்துள்ள அலபாமா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட, '2011 சொனாட்டா' மாடலில், 1,300 கார்களில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்த கார்கள் மற்றும் டிசம்பர் வரை, தென் கொரியாவில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 46 ஆயிரம், 'ஒய்.எப்., சொனாட்டா' மாடல் கார்கள் ஆகியவை, திரும்பப் பெறப்பட உள்ளன. தென் கொரியாவில், கடந்தாண்டு செப்டம்பர் முதலும், அமெரிக்காவில் இம்மாதமும், இந்த புதிய கார்களின் விற்பனை துவங்கியது. ஹுண்டாய் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: இந்த புதிய மாடல் கார்களின் முன் கதவில் உள்ள தாழ்ப்பாளில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கடந்த திங்களன்று, ஹுண்டாய் டீலர்கள் தெரிவித்தனர். இதனால், நேற்று முன்தினம் முதல், அமெரிக்காவில், இந்த புதிய கார்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. ஆனால், இந்த கோளாறால், விபத்துகள் ஏற்பட்டதாக எவ்வித தகவலும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார். |
|
|
|
|